பனை மரத்தின் உற்பத்திப் பொருட்கள் குறித்து சிறகுகள் அமைப்பு சார்பில் ஈரோட்டில் இரண்டு நாள் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “கற்பகத்தருவான பனை மரம் நீர் மற்றும் உரம் இல்லாமலேயே வளரக்கூடியது. பதநீர், பனங்கருப்பட்டி போன்ற உணவுப் பொருட்களையும், அதன் ஓலை உள்ளிட்ட பொருட்களில் இருந்து கைவினைப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. பனை மரங்கள் நீரைத் தேக்கி வைத்து, நிலத்தடி நீர் மீட்சிக்கு உதவுகின்றன. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் 6 வழிச் சாலைகளாக மேம்படுத்தப்படும்போது பனை மரங்கள் அகற்றப்படுகின்றன.
வறட்சியால் தருமபுரி பகுதியில் பனை மரங்கள் வாடிவிட்டதாகவும், இத்தகைய மரங்கள் பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட வேண்டும். பனை மரங்களை வெட்ட அனுமதி பெற வேண்டும் என அரசாணை இருந்தும், சில இடங்களில் அவை சுடுமண் சூளைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஒரு லட்சம் பனை விதைகள் நடப்பட்டு வருகிறது. ரூ.200 கோடி மதிப்பிலான பனை பொருட்கள் ஏற்றுமதி மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது” என அவர் தெரிவித்தார். பனை நாற்றுகளை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.